புதன், 11 மார்ச், 2009

இந்தியா ஒரு நாடெனல் கூடுமோ?

பைந்தமிழ்ப் பாவலர் மு.வே.கங்காதரன் அவர்களின் கவிதை ஒன்றைக் காண்போம்.
தனித்தமிழ்ப் பாவலர் பெருஞ்சித்திரனார்நெறி போற்றித்
தூய தமிழில் பாக்கள் பலவற்றைப் படைத்தளித்துள்ள இவர்
சென்ற ஆண்டு ஈரல் நோயால் இயற்கை எய்தினார்.

தமிழ்,தமிழினம் என்றெ எப்போதும் சிந்தைசெய்து
ஏழு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.
கணக்காசிரியராகப் பணியாற்றிப் பின் தமிழ் முதுகலை பயின்று
தமிழ்ப் பேராசிரியராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர்
தமது மறைவு வரை,தமிழின எழுச்சிப் பாடல்களையே வெளியிட்டுவந்தார்.

இந்தியா ஒரு நாடெனல் கூடுமோ?

-பாவலர் மு.வே.கங்காதரன்

ஈழம் இந்நாள் எரிவதைக் காண்கிறோம்

ஏனோ இன்னும்நாம் கிளர்ந்தெழவில்லையே!

ஆழும் நீரினால் பிரிந்துளோம் ஆயினும்

அன்னையாந் தமிழ் மாந்தரே அல்லமோ?

பாழும் சிங்களக் காடையர் பண்பிலார்

பாருமிழ்ந்திடப் பல்வகைக் கேடுகள்

தாழும் சாடியே செந்தமிழ்ச் சாதியைத்

தகுதி நீங்கியே தாழ்வுமுற்றாரரோ!



பேசித் தீர்க்குமோர் பெருநெறி நீங்கினர்;

பேசித் தீர்ப்பதாய்ச் சொல்வது போலியே!

ஏசி வாழ்ந்தவர் இடும்பைகள் சூழ்வரே

என்றும் ஒன்றெனக் கூடியே வாழ்வரோ?

கூசிடார் மனம் கொல்வதும் தேர்ந்தனர்

கொடுமைக் கென்றுமோர் எல்லையே குறித்திலர்

மாசில் நந்தமிழ் மாந்தரும் மகிழ்வுற

வாழும்நாள் வரும் வாய்ப்பெதும் இல்லையோ?



தமிழன் சிங்களர் தம்மினால் சிதைவனோ?

தக்கார் எண்ணியே தக்கன சூழ்வரோ?

அமைதி காணவே ஆவன செய்வரோ?

அழிந்துபோகுமோ அங்குள தமிழினம்?

அமைதி காப்பதோ அம்மவோ இந்தியம்?

அடிமையாவதோ அன்னைத் தமிழினம்?

இமையும் நம்முடைத் துன்பமே எண்ணிடா

இந்தியா வொருநாடெனல் கூடுமோ?




(ஈழம்:பன்மலர்ச் சோலை-பக்கம்-41)

பத்து ஆண்டுகள் முன்னர் எழுதப் பெற்ற இக்கவிதை

இன்னும் ஈழத் துயர்நிலை தொடர்வதை உருக்கமுடன்
உணர்த்துகிறது.

நன்றி:முனைவர் மறைமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக