புதன், 11 மார்ச், 2009

"சரித்திரத்தில் போர்"

அரசியல் திருவும் விளம்பரப் பொலிவும் வாய்க்கப்பெறாத் தமிழ்க்கவிஞர்களின் கவிதையே இப்பகுதியில் இடம்பெறும்.
இன்று நாம் காணவிருப்பது கவிஞர் தளவை இளங்குமரன் அவர்களின் கவிதையாகும்.நெல்லையில் பிறந்த இக்கவிஞர்
செங்கல்பட்டு மருத்துவமனியில் கதிரியக்கத் தொழில்நுட்பப் பணி புரிந்து
இந்த ஆண்டு பணிநிறைவு பெற்றுள்ளார்.
குழந்தைகளுக்காக ;பிஞ்சுப்பலா' என்னும் கவிதைத் தொகுதியையும்
இளைஞர்களுக்காக 'காதல் பலா'என்னும் தொகுதியையும் வழங்கிய இவர்
அண்மையில் 'ஞான உலா' என்னும் தொகுதியை வெளிக்கொணர்ந்துள்ளார்.சமூக ஓர்மையும் தமிழின எழுச்சியும் தாங்கிய
கவிதைகளின் தொகுப்பாக அந்நூல் அமைந்துள்ளது.
அந்நூலிலிருந்து"சரித்திரத்தில் போர்" என்னும் தலைப்பிலமைந்த பினவரும் கவிதை வழங்கப்பட்டுள்ளது.


"சரித்திரத்தில் போர்"

-கவிஞர் தளவை இளங்குமரன்

நாள்தோறும் பழிமனத்தால்

நன்றிகெட்ட இழிகுணத்தான்

நசுக்குகிறான் தமிழினத்தைத் தாமும்-அந்த

நீள்சோகக் கதையனைத்தும்

நெஞ்சதிரச் செவிமடுத்தும்

நெடுமரமாய்க் கிடப்பதுவோ நாமும்?



ஆழ்கடலின் நீலவுடை

அணிந்திருக்கும் கோலவுடல்

ஆகிறதே தமிழ்ரத்தச் சேறும்-அந்தப்

பாழ்நிலையைச் சகிப்புடனே

பார்த்திருக்கச் சாய்க்கடையோ

பாராண்ட நம் ரத்த ஆறும்?



சாய்ந்தாடும் பூவனத்தைச்

சந்தனத் தேர்ச் சேயினத்தைச்

சருகாகக் கொளுத்துகிற நேரம்-நாமும்

பாய்ந்தோடித் தடுக்காமல்

பதிலடிகள் கொடுக்காமல்

பஞ்சாங்கம் படிப்பதுவோ வீரம்?



தாய்க்குலத்தை நடுத்தெருவில்

தான் நிறுத்திச் சிங்களத்துத்

தறுதலைகள் பறிப்பதுவோ மானம்?-அந்த

நாய்க்குலத்தைப் புடைக்காமல்

நல்லறிவு புகட்டாமல்

நாமிருந்தால் பரம்பரைக்கே ஈனம்!



வீழ்ந்தோமேல் தனியீழ

விடுதலைக்கே வீழ்ந்தோராய்

விட்டகல்வோம் சரித்திரத்தில் பேரும்-இனி

வாழ்ந்தோமேல் தமிழீழ

வரலாற்ருப் பூமியில்தான்

வாழ்வதெனக் கொதித்தெழுவோம் வாரும்!







கவிஞரின் உணர்வு நமக்கும் தேவைதானே?
அன்புடன்,
மறைமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக